நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விவசாயத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு!!
இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களமூடாக (Department of Census and Statistics ) மேற்கொள்ளப்படும் 2024/25 பயிர்ச்செய்கை ஆண்டுக்கான விவசாயத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கையானது 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி தொடக்கம் 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியை அடிப்படையாக கொண்டு இடம்பெறவுள்ள நிலையில் நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவில் இந் நடவடிக்கைகளில் எண்ணீட்டாளர்களாக செயற்படவுள்ள கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தௌிவூட்டல் மற்றும் பயிற்சிக் கருத்தரங்கானது 2025 டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
நாவிதன்வௌி பிரதேச செயலக புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் திரு. மு. வரதராசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலக புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் Z. M. ஜாபீர், அம்பாறை மாவட்ட செயலக புள்ளிவிபரவியல் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் M. நிப்ராஸ், கல்முனை தமிழ் பிரதேச செயலக புள்ளிவிபரவியல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் A. L. M. முன்சிப் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவில் குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் மேற்பார்வை உத்தியோகத்தராக செயற்படவுள்ள நாவிதன்வௌி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் M. I. இஷாக் அவர்களும் டெப்லற் கணினி தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை விவசாயத்துறை கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காண்பதுடன் நிலப்பயன்பாடு, நிலவுடைமை, பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, உரம் மற்றும் பூச்சிக் கொல்லிப் பயன்பாடு மற்றும் விவசாய இயந்திர சாதனங்களின் பயன்பாடு பற்றிய அளவு ரீதியான தகவல்களைச் சேகரிப்பதும் அதன் மூலம் எதிர்கால விவசாய அளவீடுகளுக்கு பயனுள்ளதாக அமையும் மாதிரி சட்டகங்களைத் தயாரிப்பதும் இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.
இக்கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் நாட்டின் பட்டினியை ஒழிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நிலைத்திருக்கும் விவசாயத்தை ஊக்குவிக்கவும், கிராமிய வறுமை மற்றும் மற்றும் வள முகாமைத்துவத்தைக் கண்காணிக்கவும், நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG) மற்றும் குறிகாட்டிகளைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுவதுடன் இத்தொகைமதிப்பு இறுதியாக 2013/14 பயிற்செய்கை ஆண்டில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments