Column Left

Vettri

Breaking News

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் ஹலீம் மீண்டும் தெரிவு.!




நூருல் ஹுதா உமர்


கல்முனை யைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் தெரிவாகியுள்ளார்.

இந்தத் தெரிவு இன்று பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஒன்றுகூடலில் நடைபெற்றது.

பீட உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில் அவர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டமை, அவரது தலைமைத்துவம் மற்றும் பீட முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மீது அங்கத்தினர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

கல்முனையைச் சேர்ந்த பாடசாலை அதிபர் மறைந்த மொஹமட் அப்துல் லத்தீப் மற்றும் கதீஜா உம்மா ஆகியோரின் மூன்றாவது மகனாகப் பிறந்த ஹலீம், 1970 முதல் 1980 வரை கல்முனை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 10 வரை கல்வி கற்றார்.

பின்னர் அம்பாறை மத்திய கல்லூரி (தற்போது டி.எஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலை) யில் தரம் 11 மற்றும் 12 கல்வியைத் தொடர்ந்து, பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கணிதத் துறையில் சிறப்புப் பட்டப்படிப்பிற்குத் தெரிவானார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிறப்புப் பட்டம் பெற்ற பிறகு, 1993 ஆகஸ்ட் மாதம் வரை அங்கு மின்னியல் மற்றும் இலத்திரனியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

பின்னர் ஹாங்காங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பையும், அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் கலாநிதி பட்டப் படிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

1996 இல், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பெல் ஆய்வகத்தில் (Bell Labs) ஆய்வாளராக இணைந்து, மொபைல் மற்றும் நிலையான வயர்லெஸ் தொடர்பாடல் துறையில் அதிநவீன ஆராய்ச்சி மேற்கொண்டார். பின்னர் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் நியூ ஜெர்சி இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

2009 முதல் 2011 வரை சவுதி அரேபியாவின் கிங் பஹத் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும், அதன் பின்னர் ஹாய்ல் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் பதவி வகித்தார்.

2016-2017 காலப்பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து, பொறியியல் கற்கைகளுக்கான I.E.S.L. அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 2020 ஜனவரியில் முதன்மைப் பேராசிரியராகவும், பிப்ரவரியில் துறையிடைசார் கற்கைகள் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமைத்துவத்தில், பல்கலைக்கழகத்தில் டயலொக் எக்சியாடா நிறுவனத்துடன் இணைந்து 5வது தலைமுறை வயர்லெஸ் கண்டுபிடிப்பு மையம் (5GIC) நிறுவப்பட்டது. இதன் பணிப்பாளராக தற்போது அவர் பணியாற்றி வருகிறார்.

பதவிக்காலம் மற்றும் மீண்டும் தெரிவு

2022 ஆகஸ்ட் 18 முதல் பீடாதிபதியாகப் பொறுப்பு ஏற்ற ஹலீம், தனது முதல் பதவிக்காலத்தில் பீடத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2025 ஆம் ஆண்டின் தெரிவிலும் அவர் ஒருமித்த ஆதரவுடன் மீண்டும் பீடாதிபதியாக தேர்வாகியுள்ளார்.

பேராசிரியர் ஹலீம், உலகத் தரம் வாய்ந்த பல சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளில் தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார். பல தரம்வாய்ந்த நூல்கள், கட்டுரைகள், மற்றும் தொழில்நுட்பக் கையேடுகள் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. இவரது ஆய்வுகள், தொலைத்தொடர்பு மற்றும் வயர்லெஸ் நுட்பங்களில் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகின்றன.

பேராசிரியர் ஹலீமுக்கு முன் பீடாதிபதியாக பணியாற்றிய கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக 2013 முதல் 2022 வரை மூன்று தவணைகள் பீடாதிபதியாக இருந்ததுடன், தற்போது உபவேந்தராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஹலீமின் மீண்டும் தெரிவு, அவர் கொண்டுள்ள தலைமைத்துவத் திறமை, கல்வித் துறையில் அர்ப்பணிப்பு, மற்றும் பீட முன்னேற்றத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளைப் பிரதிபலிக்கிறது.

No comments