Column Left

Vettri

Breaking News

இலங்கை வருகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் : யாழ்., முல்லைத்தீவுக்கு விஜயம்




 உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயமானது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச தரப்புகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் என பலதரப்பையும் சந்தித்து பொறுப்புக்கூறல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட  உள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரடியாக நிலைமைகளை ஆராய உள்ளதுடன், உள்நாட்டு போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்திக்கவும், விஜயத்தின் இறுதியில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கு எதிராக வெளிக்கள சர்வதேச விசாரணை ஒன்றுக்கான தீர்மானமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட உள்ளது. பிரித்தானியா தலைமையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு அந்தஸ்து கொண்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நட்பு நாடுகள் பலவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல், போர் குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை கண்டறிதல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன சர்வதேசத்தின் அழுத்தங்களாக உள்ளன.

இதனை பின்னணியாக கொண்டு தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளக பொறிமுறை ஒன்றின் கீழ் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று 58 ஆவது அமர்வில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டிருந்தார்.

எனவே அரசாங்கத்தினால் ஜெனிவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஆராயும் வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். பொறுப்புக்கூறலில் இலங்கையின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு செப்டம்பரில் எழுத்து மூல அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Subscribe Us