Home
/
இலங்கை செய்திகள்
/
பிரதான செய்திகள்
/
தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி
தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி
( வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு மண்ணின் தலைவிதியை அங்கு வாழும் தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போவது ஆதம்பாவாவா அல்லது வசந்தவா? மக்களை சிந்தியுங்கள்.
இவ்வாறு நேற்று காரைதீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சி கட்சியின் மாபெரும் முதலாவது உள்ளூராட்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பினார் .
குறித்த முதலாவது மாபெரும் பிரச்சார கூட்டம் காரைதீவு 12 புளியடியில் அந்த வட்டாரத்தின் பிரதான வேட்பாளர் சின்னதம்பி சிவகுமார் தலைமையில் நேற்று (1) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது .
அங்கு கோடீஸ்வரன் மேலும் பேசுகையில் .
காரைதீவு மண்ணிலே இதுவரைக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி தான் ஆட்சி செய்து வந்தது.
இங்கே போட்டியிடுகின்றவர்களை தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருந்தார்கள் . தமிழர் தமிழரை ஆளவேண்டும் என்ற நோக்கில் தான் தந்தை செல்வா இலங்கை தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் அதே பாணியில் தமிழரை தமிழர் ஆளும் சுயாட்சி சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றார்.
ஆனால் இன்று பேரினவாத கட்சி ஒன்றுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு அபிவிருத்தி என்று சிலர் மாயை வலையில் சிக்கியுள்ளனர். அவர்கள் தனித் தமிழ் வேட்பாளர்களாக தமிழரால் தெரிவு செய்யப்பட்டிருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம். அதில் கலப்பு உள்ளது.
ஆனால் ஆதம்பாவால் தெரிவான அவர்களுக்கு தெரியாமல் இந்த மண் பறிபோகும். அப்போது அவர்களால் எதுவும் செய்ய முடியாது. கையறு நிலையில் இருப்பார்கள்.
அந்த வேட்பாளர்களை தீர்மானித்ததும் ஆதம்பாவாவா தான் என்பதை நீங்கள் மறந்து விட முடியாது.
அவரால் வந்தவர்கள் நாளை இந்த மண்ணை சுயமாக சுதந்திரமாக உரிமையோடு பாதுகாக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.
அல்லது காரைதீவு மண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் அதைக் காப்பாற்ற ஆதம்பாவாவா முன்வருவாரா? ஒருபோதும் வர மாட்டார்.
கடைசி வரைக்கும் முடியாது .
தமிழர்களுக்கு என்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சியால் மாத்திரமே முடியும் .
எனவே அபிவிருத்தி என்ற மாயைக்குள் சிக்கி எமது மண்ணையும் மக்களையும் இழக்க காரைதீவு மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் .
காரைதீவு மக்கள் மகத்துவமானவர்கள் படித்தவர்கள். புத்திஜீவிகள் நிறைந்த மண் .எனவே அங்கு இம்முறையும் தொடர்ச்சியாக தமிழரசுகட்சி ஆட்சி அமைப்பது நிச்சயமாகும் .
எனவே காரைதீவில் உள்ள தன்மானத் தமிழன் ஒருவரும் தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிகளுக்கோ பேரினவாத கட்சிகளுக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.
அதனை நிச்சயம் நீங்கள் காப்பாற்றுங்கள்.
என்றார்.
அங்கு ஏனைய வேட்பாளர்களும் உரையாற்றினர்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் தலைவிதியை தீர்மானிப்பது ஆதம்பாவாவா? வசந்தவா? காரைதீவில் கோடீஸ்வரன் எம்பி ஆக்ரோஷமாக கேள்வி
Reviewed by Thashaananth
on
5/03/2025 07:35:00 PM
Rating: 5
Reviewed by Thashaananth
on
5/03/2025 07:35:00 PM
Rating: 5







No comments