தொழுநோயை அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புடனேயே கட்டுப்படுத்த முடியும்! மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி Dr. ஆர். முரளீஸ்வரன்!!
( வி.ரி.சகாதேவராஜா)
தொழுநோயைக் கட்டுப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். சுகாதாரத் துறையினர், கல்வித் துறையினர், பிரதேச அரச நிருவாகத் பிரிவினர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தொழுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர். ஆர். முரளீஸ்வரன் , 2025 ஆம் ஆண்டில் தொழுநோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைளுக்கான திட்டமிடலுக்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தின் நோக்கம் பற்றித் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையிலான தொழுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது மாவட்டத்தில் தொழுநோய் தீவிரத்தை உணர்த்திநிற்கின்றது.
2025 ஆம் ஆண்டில் தொழுநோய்தடுப்புக்கென மாவட்டத்தில் காணப்படும் அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து பாரிய அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகைகளும் கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைந்த கூட்டம்மொன்று அண்மையில் மருத்துவர். சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட உயர் அதிகாரிகள், தொழுநோய்க் கட்டுப்பாட்டுக்கு தொடர்ந்து தமது பங்களிப்பினை செய்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், வருடாந்த தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைத்து துறையினரின் ஒத்துழைப்பையும் பெறுவதுடன், அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் உள்வாங்குவதுமாகும்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரும், தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்தனர். மேலும், தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள், வருங்கால தொழுநோய் கட்டுப்பாட்டு திட்டங்களை வகுப்பதற்கும், அவற்றைச் சிறப்பாக செயல்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
இக் கூட்டத்தினை பிராந்திய சுகாதாத சேவைகள் பணிமனையின் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிக Dr. லுபோஜிதா கமலராஜ் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments