Vettri

Breaking News

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!




 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற 69ஆவது போட்டியில் 4 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 17 புள்ளிகளுடன்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

எனினும், இரவு நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிபெற்றால் அவ்வணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏற்கனவே ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டிருந்ததாலும் பஞ்சாப் கிங்ஸ் அந்த வாய்ப்பை இழந்திருந்ததாலும் இந்தப் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய யாழ். மைந்தனும் இலங்கை வீரருமான விஜயகாந்த் வியாஸ்காந்த் திறமையாக பந்துவீசி 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் போட்டியில் ப்ரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டே வியாஸ்காந்த்தின் முதலாவது விக்கெட்டாக பதிவானது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை வீரர்கள் மூவரும் மத்திய வரிசை வீரர் ஒருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி பஞ்சாப் கிங்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

ஆதர்வா டெய்டுடன் 55 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த ப்ரப்சிம்ரன் சிங் தொடர்ந்து ரைலீ ருசோவ்வுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

ஆதர்வா டெய்ட் 27 பந்துகளில் 46 ஓட்டங்களையும் ப்ரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (174 - 3 விக்)

மொத்த எண்ணிக்கை 181 ஓட்டங்களாக இருந்தபோது ரைலி ருசோவ் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களை விளாசினார்.

ஜிட்டேஷ் ஷர்மா 15 பந்துகளில் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் 33  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முதல் பந்திலேயே ட்ரவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தது சன்சைரர்ஸ் ஹைதாராபாத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், அபிஷேக் ஷர்மா உட்பட நான்கு துடுப்பாட்ட வீரர்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். ராகுல் த்ரிபதியுடன் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா அணியைப் பலப்படுத்தினார்.

ராகுல் த்ரிபதி 18 பந்துகளில் 33 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து நிட்டிஷ் குமார் ரெட்டியும்ஹென்றிச் க்ளாசனும் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

நிட்டிஷ் குமார் ரெட்டி 25 பந்துகளில் 37 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 26 பந்துகளில் 46 ஓட்டங்களையும் குவித்து தமது அணி வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

ஷாஹ்பாஸ் அஹ்மத் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அப்துல் சமாத் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் சன்விர் சிங் ஆட்டம் இழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 37 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷால் பட்டேல் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

No comments