Column Left

Vettri

Breaking News

இடியுடன் கூடிய மழை பெய்யும்!!




கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

No comments

Subscribe Us