Column Left

Vettri

Breaking News

கல்விப் பணியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயணம்; அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஓய்வு.!!!




(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபர் திலகம் டேவிட் அமிர்தலிங்கம் 34 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்து இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு அவருக்கான சிறப்புப் பாராட்டு நிகழ்வு அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் க.ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக பேண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் புடைசூழ பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், வருகை தந்த அதிதிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் அவரது நீண்டகால கல்விச் சேவையை நினைவுகூர்ந்து பாராட்டுரைகளை வழங்கியதுடன் நினைவுச்சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.அத்துடன் மாணவர்கள் அதிபருக்கு மாலை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து கலந்து கொண்ட ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் அதிபர்கள், அவரது கல்விச் சேவைக்கால அனுபவங்கள், அர்ப்பணிப்பு மற்றும் மாணவர் சமூகத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பாராட்டுரை வழங்கினர். 1992 நவம்பர் 2ஆம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்ற டேவிட் அமிர்தலிங்கம், அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் சுமார் 20 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக நியமிக்கப்பட்டு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து பிரதி அதிபராகத் தரமுயர்த்தப்பட்டு மீண்டும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் பணியாற்றிய அவர், 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் அதிபராக எட்டு ஆண்டுகள் கடமையாற்றினார். பின்னர் 2021ஆம் ஆண்டு முதல் 2026 செப்டெம்பர் 25ஆம் திகதி வரை அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 34 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்யும் இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B.A., M.A. (அரசியல் விஞ்ஞானம்) பட்டங்களையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளையும் பெற்றுள்ளார். இவரது நீண்டகால கல்விச் சேவையைப் பாராட்டி 2019ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தினால் “தியாக தீபம்” விருதும், 2023ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் “குரு பிரதீபா பிரபா” கௌரவ விருதும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், திருக்கோவில் கல்வி வலயத்தினால் “அதிபர் திலகம்” எனும் கௌரவப் பட்டமும், ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி பணிமனையால் “மாமனிதர்” எனும் கௌரவமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஓய்வுபெறும் அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்திற்கு தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

No comments

Subscribe Us