Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று, தீவுக்காலை அருள்மிகு தில்லையாற்றுப் பிள்ளையார் ஆலயத்தில் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் "கிராமத்துக்கு மகுடம்" நிகழ்வு....!!!




ஊடகவியலாளர் - கிரிசாந் மகாதேவன் - அக்கரைப்பற்று, கோளாவில் தீவுக்காலை பிரதேசத்தில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை வாழ்த்தி கௌரவிக்கும் "கிராமத்துக்கு மகுடம்" (Crown of the Village) பாராட்டு விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவானது தீவுக்காலை அருள்மிகு தில்லையாற்றுப் பிள்ளையார் தேவஸ்தான வளாகத்தில் இடம்பெற்றது. கிராமத்தின் எதிர்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில்சார் துறைகளில் முக்கிய சாதனைகளைப் புரிந்த கிராமத்தின் புதல்வர்கள் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக, * அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்அபூபக்கர் ஆதம்பாவா, * ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், * ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) இணைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமான ஆர். ரதீசன், * கௌரவ பிரதேச சபை உறுப்பினர் திருமதி.விஜயராணி, * பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், * கலாச்சார உத்தியோகத்தர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், கல்வியே சமூகத்தின் மிகச்சிறந்த வளர்ச்சி மற்றும் உயர்வு எனவும் இதனை ஊக்குவிக்க ஆலயங்களில் கௌரவிப்பு நிகழ்வுகள் நடப்பது சிறப்பானது சுட்டிக்காட்டினர். மேலும், மாணவர்கள் பெற்ற இந்த வெற்றிகள் ஏனைய இளைய தலைமுறையினருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்வில் சாதனை படைத்த வெற்றியாளர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments

Subscribe Us