சாய்ந்தமருதில் வர்த்தகர்களுக்கு விசேட விழிப்புணர்வு!!
( எம்.என்.எம்.அப்ராஸ்)
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (01) சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.மதன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள், மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரிகள், மருந்தக உரிமையாளர்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வில், புலனாய்வு உத்தியோகத்தர் இசட். எம்.ஸாஜீத் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான வர்த்தக நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். இதன்போது நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம், பொருட்களின் விலை காட்சிப்படுத்தல், பற்றுச்சீட்டு வழங்குதல், லேபிள் மற்றும் காலாவதி திகதி விதிமுறைகள், சரியான எடை மற்றும் அளவு முறைகள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்த்தல், உணவுப் பொருட்களின் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் முறையான சேமிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விளக்கக் காட்சி மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், வியாபாரிகள் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக பொறுப்புடனும் நியாயமான முறையிலும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.எம்.நியாஸ் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
No comments