போலி இலக்க தகட்டுடன் மோட்டார் சைக்கிள் சிக்கிய சிலாபம் பிரதேச சபை உறுப்பினர்!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சட்டத்தை இயற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை மீறும் நிலைமை சிலாபம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வலம் வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளார்.
மாதம்பே நகரில் வழமையான போக்குவரத்து சோதனையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்த்த போக்குவரத்துப் பிரிவு பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி ஒரே பதிவிலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் உலாவிக் கொண்டிருப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
சந்தேகமடைந்த அதிகாரிகள் உடனடியாக இரு மோட்டார் சைக்கிள்களையும் சுற்றிவளைத்து அதிரடி ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அந்த சோதனையின் முடிவில்தான் அந்த திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்தது அப்பட்டமான போலி இலக்கத் தகடு என்பது உறுதியானது. ஆச்சரியம் அதோடு முடியவில்லை; அந்தப் போலி இலக்கத் தகட்டுடன் பைக்கை ஓட்டி வந்த நபர் யார் என்று விசாரித்தபோது அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலாபம் பிரதேச சபையின் உறுப்பினர் என்பது தெரியவந்தது.
சிலாபம் – ஜெயபிம பகுதியைச் சேர்ந்த குறித்த மக்கள் பிரதிநிதியை உடனடியாகக் கைது செய்துள்ள மாதம்பே பொலிஸார், போலி இலக்கத் தகடு பயன்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments