Column Left

Vettri

Breaking News

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் : “அனோஜனின் விடுதலை அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்கும் ஆறுதலை தரும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்!!!




(நூருல் ஹுதா உமர்) சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான எஸ். அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது விடுதலைக்காக ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு உச்சகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: எஸ். அனோஜன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையர்கள் அனைவருக்கும் கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அவரது தாயார் தனது மகனின் நிலை தொடர்பில் அனுபவித்து வரும் வேதனையும் கண்ணீரும் வார்த்தைகளால் விவரிக்க முடியாததாகும். நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் அனோஜன் கருத்து வெளியிட்ட விடயத்தில் அவர் மன்னிப்பு கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மனிதர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரும் நிலையில், இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமை, சமாதானம், மன்னிப்பு, கருணை மற்றும் மனிதாபிமானம் போன்ற அடிப்படைப் பண்புகளை இவ்விடயத்தில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது. இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி நேரடியாகத் தலையிட முன்வர வேண்டும். குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தற்போது கட்டியெழுப்பி வரும் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றிணைந்து ஜனாதிபதியையும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சரையும் சந்திக்க வேண்டும். அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடமும், வெளிவிவகார அமைச்சரிடமும் நேரடியாக வலியுறுத்த வேண்டும். அத்துடன், சவூதி அரேபிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் மன்னிப்பு கோரும் நடைமுறை, சட்டரீதியான வாய்ப்புகள் மற்றும் இராஜதந்திர ரீதியான சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனது பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிரஜை என்ற அடிப்படையிலும், ஒரு இலங்கையர் என்ற அடிப்படையிலும், சகோதரர் அனோஜன் விடுதலை பெற்று தனது தாயாரையும் குடும்பத்தினரையும் சந்திப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிவிவகார அமைச்சும் இந்த விடயத்தில் உச்சகட்ட கரிசனையுடன் செயற்பட வேண்டும். சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொடர்ந்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, அனோஜனுக்கு மன்னிப்பு கிடைத்து அவரது தண்டனை நீக்கப்பட்டு விடுதலை பெறுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய வேண்டும். எனவே, ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உச்சகட்ட இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து, சகோதரர் எஸ். அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்புவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்

No comments

Subscribe Us