Column Left

Vettri

Breaking News

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!!




(அக்கரைப்பற்று, செப். 13 ஜே.கே.யதுர்ஷன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா இன்று (13) ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக இடம்பெற்றது. கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி காரியசித்தி கணபதி ஆராதனை கிரியைகள் ஆரம்பமாகியதுடன், மாலை வேளையில் பத்திரகாளி அம்மனின் பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், கலை, கலாசார மற்றும் பாரம்பரிய நாட்டிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன. நேற்று (12) அம்மனுக்கான தூபிக்கலசம் நிர்ணயமும், பிரம்ம முகூர்த்த வேளையில் அம்மனுக்கான யந்திர பிரதிஷ்டை, அம்மன் பிரதிஷ்டை, அடையல் பிரதிஷ்டை மற்றும் பரிவார தெய்வங்களுக்கான யந்திர பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு கிரியைகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8.00 மணி முதல் விசேட யாகபூஜைகள் இடம்பெற்றதுடன், முற்பகல் 10.45 மணியளவில் சுபமுகூர்த்த வேளையில் கலச குடமுழுக்கு கும்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா குடமுழுக்கு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் பரிவாரத் தெய்வங்களுக்கான நன்னீராட்டுதல் மற்றும் அம்மனுக்கான சுமங்கலி பட்டாம்பிகை திருக்கோல அலங்கார தரிசனம் ஆகியன நடைபெற்றன. இக்குடமுழுக்கு மற்றும் பிரதிஷ்டா கிரியைகள் பிரதிஷ்டா பிரதம குருமணி விஷ்வபிரம்மஸ்ரீ சற்குணராசா குருக்கள் தலைமையில், ஆலய குரு விஷ்வபிரம்மஸ்ரீ தினேஸ் காந்தன் ஜயா, ஆலய உற்சவகால குரு விஷ்வபிரம்மஸ்ரீ செ. நிறேகன் ஜயா, உதவி குரு சிவஸ்ரீ கனியவன் ஜயா மற்றும் சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. குடமுழுக்கு பெருவிழாவைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 12 நாட்களுக்கு விசேட மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட இக்குடமுழுக்கு பெருவிழா, அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஆன்மிக மற்றும் பாரம்பரிய சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

No comments

Subscribe Us