Column Left

Vettri

Breaking News

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பம்!!!




(செல்வி வினாயகமூர்த்தி ) கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் செப்டெம்பர் 8ஆம் திகதி அதாவது நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை நிறைவடையவுள்ளது. மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 18 தினங்கள் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இவ்வாண்டுக்கான உற்சவமும் நாளை கொடியேற்றம் மற்றும் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவத்தையொட்டி செப்டெம்பர் 10ஆம் திகதி மாலை வியாழக்கிழமை மகாபாரதம் ஏடு திறத்தலும் மகாபாரத பாராயணம் இடம்பெறவுள்ளதுடன், செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சுவாமி எழுந்தருளல் பண்ணலும்( ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகாபுரியில் இருந்து அஸ்தினாபுரத்துக்கு வருகை தரல்) நடைபெறவுள்ளன. செப்டெம்பர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்கால் வெட்டுதல் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து செப்டெம்பர் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை கல்யாணக்கால் வெட்டுதலும் ஊர்வலமும் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறும். செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை பகல் வாள் மாற்றுதல் பரந்தமான் ஸ்ரீ திரௌபதி தேவி சகிதம் வனவாசம் செல்லலும் அதனைத்தொடர்ந்து அஞ்ஞாதவாசம் பஞ்சபாண்டவர் செல்லுதல் உள்ளிட்ட முக்கிய சடங்குகளும், செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை பின்னிரவு அருச்சனன் பாசுபதம் பெற தவம் செய்தலும். அரவானை களம்பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை வீர கும்பம் நிறுத்தி தீ மூட்டுதல் பிற்பகல் கடல் நீராடி மஞ்சள் குளித்து தீ மிதித்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன. செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை பகல் தர்மருக்கு முடி சூட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து தீ குழிக்கு பாற்பள்ளைய நிகழ்வும் அதனை தொடர்ந்து இரவு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அம்பாள் ஊர்வலத்துடன் எழுந்தருளல் ஆகிய முக்கிய உற்சவ நிகழ்வுகளுடன் வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளது. தொடர்ந்து ஒக்டோபர் 3ஆம் திகதி சனிக்கிழமை 8ஆம் சடங்கு நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. உற்சவ காலத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ திரௌபதை அம்மனின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments

Subscribe Us