சாய்ந்தமருது - மாளிகைக்காடு பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் வாழ்வாதார உதவி வழங்கல்: ரூ. 96.64 இலட்சம் செலவில் 148 பயனாளிகள் பலனடைந்தனர்! "இன்று ஸகாத் பெறுபவர் நாளை ஸகாத் வழங்குபவராக மாற வேண்டும்": தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் உரை!!!
(பாறுக் ஷிஹான்)
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ஸகாத் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் மாபெரும் வைபவம் இன்று (13) சாய்ந்தமருது – மாளிகைக்காடு முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
“பைத்துஸ் ஸகாத் – ஸகாத் விநியோக வைபவம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரூபா 9,664,900.00 நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 148 பயனாளிகளுக்குப் பல்வேறு ஸகாத் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவரும், வர்த்தக சங்கத் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தைபா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவர் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி (ஹிழ்ரி), காழி நீதிபதி பொறியியலாளர் யூ.கே.எம். முஸாஜித், சாய்ந்தமருது ஜம்மிய்யத்துல் உலமா தலைவர் மௌலவி எம்.எம்.எம். சலீம் (சர்க்கி) உள்ளிட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் குறிப்பிடுகையில்:
"இந்நிகழ்வு வெறுமனே பணத்தை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அல்ல; மாறாக அமானத்தை உரியவர்களிடம் சேர்க்கும் பொறுப்பை நிறைவேற்றும் ஒரு முக்கிய நாளாகும். உண்மையில் தேவையுடையவர்களை அடையாளம் காணும் நோக்கில் எங்கள் குழுவினர் நேரடியாக வீடுகளுக்குச் சென்று கள ஆய்வு நடத்தி, வறுமையில் உள்ளவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து பயனாளிகளைத் தெரிவு செய்துள்ளனர்.
குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 85 பேருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், சிறு தொழில், கைத்தொழில் மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று ஸகாத் பெறுபவர் நாளை ஸகாத் வழங்குபவராக மாற வேண்டும்; அதுவே ஸகாத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்" எனத் தெரிவித்தார்.
வெளிப்படைத்தன்மையுடனும், நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகளுடனும் முன்னெடுக்கப்பட்டு வரும் இத் திட்டம், வறுமையிலிருக்கும் குடும்பங்களைச் சுயதொழில் மூலம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments