Column Left

Vettri

Breaking News

இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம்! பக்தியும் பாரம்பரியமும் இணையும் திருவிழா!




கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்று(30) வியாழக்கிழமை ஆகும். ஆண்டுதோறும் பல் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் இம்மகோற்சவம், இறைநம்பிக்கை, சமயப் பாரம்பரியம் மற்றும் தமிழர் பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது. வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு பூஜைகளுடன் 21 நாள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அங்கு சென்று மலையேறி விநாயகரையும் வணங்கி திருவிழாவில் கலந்து கொண்டுவருகின்றனர். நீண்ட கடைத்தெரு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் தாராளமாக வழங்கப்படுகிறது. இரவுத் திருவிழா நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றுவருகிறது. ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.தட்சணாமூர்த்தி செயலாளர் செ.சிறிதரன் பொருளாளர் தா.ஜெயராம் தலைமையிலான நிருவாக சபையினர் ஆலயத்தை அழகாக வடிவமைத்து பரிபாலனம் செய்து வருகின்றனர். கடந்த 09 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 30 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக்கேணியில் தீர்த்தம் ஆடுவதுடன் நிறைவடையவுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த தாந்தாமலையில் அமைந்துள்ள இவ்வாலயம், பல தசாப்தங்களாக பக்தர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது. வேண்டுதலுடன் வருவோர் மனநிறைவுடனும் அருளாசியுடனும் திரும்பிச் செல்கின்ற புண்ணியத் தலமாக இது மக்களிடையே சிறப்பிடம் பெற்றுள்ளது. மகோற்சவக் காலத்தில் தினமும் அதிகாலை அபிஷேகம், விசேட பூஜைகள், வேத மற்றும் திருமுறை பாராயணங்கள், மாலை உற்சவங்கள், நள்ளிரவு வரையிலான திருவீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. வண்ணமயமான அலங்காரங்களில் எழுந்தருளும் முருகப் பெருமானை தரிசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். முருகப் பெருமான் தமிழர் கடவுளாக மட்டுமன்றி, ஞானம், வீரியம், கருணை மற்றும் அறத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். அவரது மகோற்சவம் சமய நிகழ்வாக மட்டுமல்லாது, சமூக ஒற்றுமையையும் உறவுகளையும் வலுப்படுத்தும் பண்பாட்டு விழாவாகவும் அமைகிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்னதானம், பக்தர்களுக்கான குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றன. கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம், பல்வேறு உற்சவ நிகழ்வுகளைத் தொடர்ந்து தேரோட்டம் மற்றும் தீர்த்தோற்சவம் போன்ற முக்கிய நிகழ்வுகளால் நிறைவடையும். இந்நாட்களில் ஆலய வளாகம் முழுவதும் பக்தி முழக்கங்களாலும் "அரோகரா" எனும் முருக நாம ஒலியாலும் ஆன்மிகச் சூழல் நிறைந்திருக்கும். தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவம், இறைபக்தியை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினருக்கு சைவ சமய மரபுகளையும் தமிழர் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் அரிய வாய்ப்பாகவும் திகழ்கிறது. இவ்வாறான திருவிழாக்கள், சமய மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பணியைதொடர்ந்து செய்து வருகின்றன. வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா காரைதீவு

No comments