Column Left

Vettri

Breaking News

அன்று நேரடி ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தது போல் இன்று மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்!!




அன்று நாம் ஒன்றிணைந்து நேரடி ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தது போல, இன்று நாட்டிற்குள் செல்வாக்கு செலுத்தி வரும் மறைமுக ஏகாதிபத்தியத்தையும் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சிதுல்பவ்வ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பண்டைய மன்னராட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்களும் அமைச்சர்களும் அளப்பரிய சேவையாற்றினர். நாட்டிற்கு பல்வேறு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட போதெல்லாம், அவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் பாதுகாத்தனர். ஆனால், இன்றைய உலகளாவிய பூகோள அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதிப் பிராந்தியமாக மாறுவதற்குப் பதிலாக, போர் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு காலத்தில் அமைதிப் பிராந்தியமாக இருந்த இந்தியப் பெருங்கடல், ஒரு தசாப்தத்தில் போரின் தாக்கத்திற்கும், மற்றொரு தசாப்தத்தில் பனிப்போரின் தாக்கத்திற்கும் உள்ளாகி வருகிறது. பூகோள அரசியலில் நிலவும் போட்டித்தன்மை காரணமாக எமது நாடும் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. கடந்த 7 வருடங்களில் ஒரு நாடாக நாம் ஐந்து பெரும் பேரழிவுகளுக்கு முகம்கொடுத்துள்ளோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான பேரழிவுகளால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக, எமது நாடு இந்த பூகோள அரசியலின் பலிக்கடாவாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், நாட்டுக்குள் என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு உலகளாவிய பூகோள அரசியல் சவால்களுக்கு எமது நாடு அடிபணிந்து விடாதிருக்க இலங்கை பிரஜைகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இனம், மதம், சாதி, வர்க்கம் அல்லது கட்சி பேதங்களை மறந்து, மன்னராட்சிக் காலத்தைப் போலவே நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை நாம் பாதுகாக்க வேண்டும். அன்று பாதுகாக்கப்பட்ட அந்த சுதந்திரத்தையும் இறையாண்மையையும் நாம் தொடர்ந்தும் நிலைநிறுத்த வேண்டும். அன்று நிலவிய நேரடி ஏகாதிபத்தியத்தைப் போலவே, இன்று மறைமுக ஏகாதிபத்தியம் செயற்பட்டு வருவதால், அதற்கு நாம் தைரியமாக முகம்கொடுக்க வேண்டும் என்றார்.

No comments