தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினையொட்டி... *பொத்துவிலில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு!*
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினையொட்டி...
*பொத்துவிலில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு!*
'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் தேசிய ரீதியிலான தொனிப்பொருளுக்கமைய, பொத்துவில் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப நாள் நடவடிக்கைகள் இன்று (15) வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
பொது நிர்வாக அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் பேரில், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் பொத்துவில் பிரதேச சபையும் இணைந்து இந்த விசேட சிரமதானப் பணிகளை மேற்கொண்டன.
இதன் ஒரு கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொத்துவில் பஸ் தரிப்பிடம், பொதுச் சந்தை உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் சூழல் காணப்படுகிறதா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களால் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் குறித்த பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டன.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறுக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான றிழ்வான், முஹைடீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த டெங்கு ஒழிப்புப் பணியினை வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில், பொத்துவில் பிரதேச சபை தவிசாளரின் பணிப்புரையின் பேரில், சபைக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் மற்றும் களப்பணியாளர்கள் இதற்காகப் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புற சூழலையும் டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் இதன்போது பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments