Column Left

Vettri

Breaking News

அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு ஆரம்பம்!!




நூருல் ஹுதா உமர் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.எஸ். ரிஸ்ஸானா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் திருமதி எம்.எச். ரியாசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கௌரவ விருந்தினராக கல்முனை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் திரு எஸ். சுரேஷ் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர்களான திருமதி கிருஷ்ணகுமாரி டேவிட், ஐ.எம்.மவ்சூர், பாடசாலைக்கான வலயக்கல்வி பணிமனை இணைப்பாளர் தலில் அபூபக்கர் ஆகியோர் நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும், அழைக்கப்பட்ட விருந்தினர்களாக கல்முனை அஸ்மா ஜுவல்ஸ் உரிமையாளர் எம்.ஆர்.ஏ.ஆர். ரிஸ்வான், அக்கரைப்பற்று ராசிக் பரீத் வித்தியாலய அதிபர் ஏ.எம். பரீத் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர். இந்நிகழ்வின் போது மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், ஜனநாயக ஆட்சிமுறை, பொறுப்புணர்வு, தலைமைத்துவத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புகளை மாணவர்களிடையே வளர்ப்பதில் மாணவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் குறித்து விருந்தினர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பான குடிமக்களை உருவாக்கும் நோக்கில் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை என விருந்தினர்கள் தெரிவித்தனர். நிகழ்வின் இறுதியில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடமைகளை நேர்மையுடனும் பொறுப்புடனும் முன்னெடுத்து, பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுக்க முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தனர். இந்நிகழ்வை அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர் பாராளுமன்றக் குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments