Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வ கௌரவிப்பு விழா!!




நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 1992/2005 பழைய மாணவர்கள், தங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுக்கும் முன்னாள் அதிபருக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்றிரவு உணர்வுபூர்வமாக சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய தொழிநுட்ப மண்டபத்தில் நடைபெற்றது. 1992 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், தங்களது ஆசிரியர்கள் மற்றும் அக்காலத்தில் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றிய எம்.ஐ. ஜப்பார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வை மேலும் அர்த்தமிக்கதாக்கும் வகையில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்காக இராப்போசன விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட தருணங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தன. இதனுடன், பழைய மாணவர்களின் ஒன்றுகூடலின் அடையாளமாக வடிவமைக்கப்பட்டிருந்த சிறப்பு T-Shirt ஒன்றும் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பழைய மாணவர்களிடையேயான ஒற்றுமை, நட்பு மற்றும் பாடசாலையின் மீதான பற்றுறுதியை பிரதிபலிக்கும் சின்னமாகக் கருதப்படுகிறது. ஆசிரியர்களை மறவாமல் நன்றியுடன் கௌரவிக்கும் இம்முயற்சி, மாணவர்–ஆசிரியர் உறவின் உயரிய பண்பையும் கல்வியின் மனிதநேயப் பெறுமதிகளையும் வெளிப்படுத்தும் முன்னுதாரணமாகப் பலராலும் பாராட்டப்பட்டது. “ஆசான்களை மதிக்கும் மாணவர்களை உருவாக்கிய கல்வி நிலையங்களில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயம் முன்னணியில் திகழ்கிறது. காலம் கடந்த பின்னரும் தங்களது ஆசிரியர்களுக்கு பழைய மாணவர்கள் வழங்கும் மரியாதையும் நன்றியுணர்வும் கல்வியின் உண்மையான வெற்றியை எடுத்துக்காட்டுகின்றது” என நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் பாடசாலையின் தற்போதைய அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்சார், பிரதியதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments