வடக்குப் புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்!!
வடக்கு புகையிரத வீதி புனரமைக்கப்பட்டதையடுத்து, இன்று (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை மீண்டும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம் Intercity புகையிரதம் மற்றும் யாழ்ப்பாணம் இரவு நேர தபால் புகையிரதம் ஆகியன இன்று (09) முதலும், யாழ் தேவி புகையிரதம் நாளை (10) முதலும் நாளாந்தம் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் நாட்டைத் தாக்கிய “டிட்வா” (Ditwa) சூறாவளியினால் வடக்கு புகையிரத வீதியின் 14 இடங்கள் சேதமடைந்திருந்தன. அந்த இடங்கள் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில புகையிரதங்கள் மாத்திரம் இயக்கப்பட்ட போதிலும், ஜனவரி 19 ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், சேதமடைந்த வடக்கு புகையிரத வீதியின் 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (09) முதல் அந்த வீதியிலான புகையிரத சேவைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments