Column Left

Vettri

Breaking News

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்!!




 அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். அத்துடன் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகி மாணவர்களின் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாமென ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். அத்துடன் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் நற்செய்தியை திசை திருப்பவே அன்று மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தியது. நீதிமன்ற உத்தரவை மீறியதாலே பொலிஸாரும் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாகவும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று முன்தினம் (27) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

“ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க முடியாத நிலையே இருந்து வந்தது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் நற்செய்தி தெரிவிக்கப்போவதை அறிந்து, அதனை திசை திருப்பும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் தொழிற்சங்கம் போராட்டம் மேற்கொண்டது. யாருக்கும் மேண்டுமானாலும் அவர்களின் உரிமைக்காக போராட்டம் மேற்கொள்ளலாம். அதில் தவறு இல்லை. என்றாலும் இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதாலே பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை அடித்து, அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் அரசாங்கத்தை தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாக்கும் நோக்கில் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது மாணவர்களின் கழுத்தை நெரிக்கும் செயல். மக்கள் விடுதலை முன்னணி வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களின்போது, போராட்டம் நடத்தி அந்த நடவடிக்கைகளை சீர்குலைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கையின் போதும் இவர்கள் போராட்டம் செய்தார்கள், ஆனால் இந்தியாவுக்கு சென்று அந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதன் மூலம் அனைத்து பரீட்சைகளும் பின்தள்ளப்படும் நிலை ஏற்படும். இதனால் மாணவர்களே பாதிக்கப்படப் போகிறார்கள்” என்றார்.

No comments

Subscribe Us